அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலுடன் இணைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்யும் நிலையில் உள்ளார். தற்போதைய மேயரான கரேன் பாஸை எதிர்த்துப் போட்டியிட்ட அவர், வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சில் உறுப்பினராகப் பதவி வகித்து வரும் நித்யா ராமன், கடந்த 2020-ம் ஆண்டு முதன்முறையாக கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் மேயர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த அவர், சில வாரங்களுக்கு முன்பு வரை கரேன் பாஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் இருவருக்கும் இடையே தலைமுறை மற்றும் அரசியல் கொள்கை சார்ந்த போட்டி நிலவியது. குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு, மலிவு விலை வீடுகள் மற்றும் வீடற்ற மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் இருவரும் வெவ்வேறு அணுகுமுறைகளை முன்வைத்தனர். கரேன் பாஸுக்கு ஜனநாயகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொழிலாளர் அமைப்புகள் உள்ளிட்ட அரசியல் செல்வாக்கு மிக்க குழுக்களின் ஆதரவு கிடைத்தது. அதேவேளையில், நித்யா ராமனுக்கு ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பு உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளின் ஆதரவு கிடைத்தது.
முன்னதாக, 2025-ம் ஆண்டு பாலிசேட்ஸ் காட்டுத்தீ ஏற்பட்டபோது கரேன் பாஸ் வெளிநாட்டில் இருந்தது உள்ளிட்ட விவகாரங்கள் அவரது நிர்வாகத்தின் மீது விமர்சனங்களை ஏற்படுத்தின. இதனைத் தனது தேர்தல் பிரசாரத்தில் நித்யா ராமன் முக்கியமாக முன்வைத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடற்ற மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் செலவு அதிகம் கொண்டதாகவும், போதிய பலன் அளிக்காததாகவும் அவர் விமர்சித்தார். மேலும், 2028-ம் ஆண்டு கோடைக்காலத்திற்குள் சாலைகளில் தங்கும் வீடற்ற மக்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பதுடன், தனது முதல் நான்கு ஆண்டு பதவிக்கால முடிவில் அந்தப் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காண்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
மறுபுறம், தனது ஆட்சிக்காலத்தில் வன்முறைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், மலிவு விலை வீடுகள் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வீடற்ற மக்களின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கரேன் பாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் வீடற்ற மக்களின் பிரச்சினை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மலிவு விலை வீடுகள் ஆகியவை முக்கியத் தேர்தல் விவாதங்களாக அமைந்தன.
யார் இந்த நித்யா ராமன்?
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நித்யா ராமன், 1981-ம் ஆண்டு பிறந்தவர். தனது 6 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அவர், தனது 22-வது வயதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், பின்னர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான MIT-யில் நகர்ப்புறத் திட்டமிடல் (Urban Planning) துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, சென்னையில் ‘Transparent Chennai’ என்ற நகர்ப்புற ஆய்வு அமைப்பை நிறுவி, சுகாதாரம் மற்றும் அடிப்படை நகர்ப்புற வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டார்.
2013-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்த அவர், அந்நகரின் நிர்வாகப் பணிகளில் பணியாற்றியதுடன், வீடற்ற மக்களுக்கான அமைப்புகளிலும் தனது பங்களிப்பை வழங்கினார். பின்னர் 2020-ம் ஆண்டு நகர கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, நித்யா ராமன் 51.67 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். கரேன் பாஸ் 48.33 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். எனினும், வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்து அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு நித்யா ராமனின் தேர்தல் முன்னிலை மற்றுமொரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.




