யூத் ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்த 15 வயது இந்திய வீராங்கனை!

ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தன்வி பத்ரி, யூத் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

செனகல் நாட்டின் டாக்கரில் நடைபெற்று வரும் 2026 யூத் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 15 வயது பேட்மிண்டன் வீராங்கனை தன்வி பத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் இரண்டாம் நிலை வீராங்கனையான யுசுனோ வதனாபேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் யூத் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், இப்பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கமும் உறுதியாகியுள்ளது.

54 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான அரையிறுதிப் போட்டி!

நேற்று ( நவம்பர் 4) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் யுசுனோ வதனாபேவை எதிர்கொண்ட தன்வி பத்ரி, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய ஜப்பான் வீராங்கனை 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆட்டத்தைச் சமன் செய்தார். இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதிக்கட்டத்தில் நிதானமாகவும், தன்னம்பிக்கையுடனும் விளையாடிய தன்வி 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 54 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 21-14, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

யூத் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையுடன் மோதல்!

தனது வரலாற்றுச் சாதனையைத் தங்கப் பதக்கத்துடன் நிறைவு செய்யும் முனைப்பில் தன்வி பத்ரி உள்ளார். இறுதிப்போட்டியில் சீனாவின் யி ஷின் ஜாங் அவரை எதிர்கொள்கிறார். இவர் சமீபத்தில் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். இறுதிப்போட்டி நவம்பர் 5-ம் தேதி (இன்று) நடைபெறுவதாக யூத் ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வப் போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்கர் அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் தன்வி வெற்றி பெற்றால் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் கிடைக்கும்.

யூத் ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டனின் முந்தைய சாதனைகள்!

யூத் ஒலிம்பிக் பேட்மிண்டன் வரலாற்றில் இந்திய வீரர்கள் ஏற்கெனவே சில முக்கியச் சாதனைகளைப் படைத்துள்ளனர். 2010-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் யூத் ஒலிம்பிக்கில் எச்.எஸ். பிரணாய் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ம் ஆண்டு ஆதித்யா ஜோஷி ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார். 2018-ம் ஆண்டு பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற போட்டியில் லக்ஷ்யா சென் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்தார். இந்த வரிசையில் தற்போது தன்வி பத்ரியும் இணைந்துள்ளார். குறிப்பாக, யூத் ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். 15 வயதிலேயே சர்வதேச அரங்கில் இத்தகைய சாதனையைப் படைத்துள்ள தன்வி பத்ரி, இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.