பெரம்பூர் அருகே நடுரோட்டில் கத்தியை வைத்து இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்த இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி தீபா. பிரேம்குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தீபா தன்னுடைய கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரேம் குமார் மதுபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க தீபாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டை விட்டு வெளியே வந்த பிரேம் குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தெருவில் செல்பவர்களை மிரட்டியுள்ளார்.
மேலும் அங்கிருந்த 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திரு.வி.க. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் பிரேம்குமாரும் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், செங்குன்றம் அருகே பதுங்கியிருந்த பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர் நிர்மல் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.







