இப்படம் ஓடிடி யில் வெளியான நிலையிலும் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
நடிகர் மாதவன் இயக்கி நடித்து ஜூலை 1ஆம் தேதி வெளியான ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்கு விஞ்ஞான ரகசியங்களை அளித்ததாக சிபிஐயால் 1994இல் கைது செய்யப்பட்டு பின்னர் 1998இல் உச்சநீதிமன்றத்தால் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
தமிழரான விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், 4 மொழிகளில் வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ராக்கெட்ரி படம் தற்போது அமேசான் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும் இப்படம் ஓடிடி யில் வெளியான நிலையிலும் பல திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியான இப்படம் நேற்றோடு 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் டாப் 1000 படங்கள் வரிசையில் ராக்கெட்ரி – நம்பி விளைவு’ 9.0 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற லார்ட் ஆஃப் த ரிங்ஸ், டார்க் நைட் போன்ற படங்களை பின்னுக்குத்தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய மாதவன், அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்திருப்பதாகக் கூறும் ரசிகர்கள் இவர் மேலும் படங்கள் இயக்கவேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.







