கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் ஆண்களைக் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து அவர்களின் செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு எதிர்முனையில் பெண்கள் போல் பேசி அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஜூலை 27ஆம் தேதி கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரவீன் (25) என்பவர் தனது வேலை முடிந்து வரும்போது தனது செல்போனிற்கு வந்த அழைப்பின் அடிப்படையில் சூலூர், நாகமநாயக்கன்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, ஒரு பெண் மற்றும் அவருடன் இருந்த மற்ற 3 நபர்களும் சேர்ந்து பிரவீனை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, இருசக்கர வாகனம் ஆகிவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக சூலூர் காவல் நிலையத்தில் பிரவீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட சூலூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (20), ராஜேஷ் குமார் (24), இளந்தமிழன் (29), சுரேஷ் (23) ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து அவர்கள் வழிப்பறி செய்த நான்கு சக்கர வாகனம் 2, செல்போன் 2 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார்.
பொதுமக்கள் இதுபோன்ற செல்போன் செயலிகள் மூலம் வரும் குறுஞ்செய்திகள் அல்லது செல்போன் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-ம.பவித்ரா