நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது.
நாட்டின் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்று புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தில் மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கவுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால், எந்தக் கட்சியின் சின்னமும் இடம்பெறாது. அந்த வாக்குச் சீட்டில் இரு பகுதிகள் இருக்கும். அதில் ஒரு பகுதியில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். மற்றொரு பகுதியில் யாரைத் தேர்வு செய்ய விருப்பமோ அவர்களை வரிசைப்படுத்தி எண்கிளைக் குறிப்பிட வேண்டும்.
நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 780 உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். முதல் வாக்கை பிரதமர் நரேந்திர மோடி பதிவு செய்தார். இன்று மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெறும் நிலையில், உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு துணைத் தலைவர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா