சென்னை நந்தம்பாக்கத்தில் நடிகர் ஆர்.கே-வின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் உள்ள தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன் வீட்டில் கடந்த 10ஆம் தேதி 200 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் கொள்ளை போனது. அவரது மனைவி ராஜியை கட்டிப்போட்டு, வாயில் பிளாஸ்த்திரியை ஓட்டி கத்தி முனையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளி செந்தில் உள்ளிட்ட 4 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், டிபன்ஸ் சாலையில் காலை 5:30 மணியளவில் ஆர்.கே-வின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், இரவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொள்ளையர்களை பிடிக்க 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரமேஷின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் ஊட்டி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் கோட்டூர்புரம், பெசன்ட் நகர் பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் நான்கு இடங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.







