தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீட்டை யாராலும் ஏற்றுகொள்ள முடியாது என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ நாகை மாலி கூறுகையில், இந்தக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை பேசி இருக்கிறோம். 1990ம் ஆண்டிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கொள்கையை வைத்து வருகிறோம். அவர்கள் கொண்டு வந்திருக்கும் வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பதை நாடாளுமன்றத்தில் நாங்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறோம்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளிடம் கருத்து கேட்டு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறோம். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95% மக்கள் இட ஒதுக்கீடு வரம்புக்குள் வந்து விட்டார்கள். இன்னும் இருக்கும் ஐந்து சதவீதம் மக்கள் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வரவேண்டும். 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்.
ஆகவே தமிழ்நாட்டில் இதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு ஆணையம் அமைத்து அந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்போக்கு சாதியை சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆணையம் சொல்லும் கருத்துக்களை கேட்டு அரசு உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நிலைப்பாடு என்பதை பதிவு செய்துள்ளோம்.
முதலமைச்சர் கூட திமுக சார்பில் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் எடுத்து செல்லும் போது, விரும்பமுள்ள கட்சிகள் இந்த மனுவில் இணைந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.
எங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் ஆணையத்தை அமைத்து பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீட்டு கொள்கையை வகுக்கலாம் என்பதுதான் எங்கள் கொள்கை. இது கூட இப்படி ஒரு பிரச்சனை வந்த போது பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த முற்போக்கு ஜாதியினர் பொருளாதார வரம்பு 4 லட்சமாக கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று நாகை மாலி கூறினார்.







