மணமகள் தலையில் மணமகன் மோதும் சடங்கு :  அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு 

கேரள மாநிலம் பாலக்காட்டில் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்லும் போது   மணமகன் தலையால் மணமகளை முட்டும் சடங்கு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின்.…

கேரள மாநிலம் பாலக்காட்டில் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்லும் போது   மணமகன் தலையால் மணமகளை முட்டும் சடங்கு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் மணமகன் வீட்டுக்கு சென்றனர். மணமகன் வீட்டு வாசலில் மணமகன் தலையை பிடித்த உறவினர் ஒருவர், மணமகள் தலையில் மோத வைத்தார். அதுவரை மகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த மணமகள், வலி தாங்காமல் அழத்தொடங்கினார்.
புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதற்காக  மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் ஒவ்வொரு திருமண வீடுகளிலும் இதுபோன்ற  சடங்கு நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை  எழுந்தது.  .இந்த விவகாரத்தை தானாக கையில் எடுத்துள்ள மாநில மகளிர் ஆணையம்  விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கொல்லங்கோடு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.