மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மின் மோட்டார் கொண்டு
குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வைத்தீஸ்வரன்கோவில், புங்கனூர்,
திருப்புங்கூர், கற்கோயில், எடக்குடி வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு
மேலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது குறுவை சாகுபடி
அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை அரசின் நேரடி நெல் கொள்முதல்
நிலையங்கள் திறக்கப்படவில்லை.
இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல்களை தனியார் வியாபரிகளிடமே விற்பனை
செய்ய வேண்டிய நிலைக்கு இப்பகுதி விவசாயிகள் ஆளாகியுள்ளனர். மேலும், பல
விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே,
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வேண்டுமென,
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கு. பாலமுருகன்







