மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், அது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன் எனவும் காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
”ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். ஆளுநரை மக்கள் விரைவில் ஊரை விட்டு அனுப்பும் சூழல் வரும். சட்டசபையில் என்ன கோப்பு கொடுக்கிறோமோ அதில் கையெழுத்து மட்டும் போட வேண்டியது தான் ஆளுநரின் வேலை.
டிஎன்பிஏஸ்சிக்கு தலைவராக சைலேந்திர பாபு நியமனத்திற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். ஆளுநர் ரவி மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது. சைலேந்திரபாபு நல்ல அதிகாரியாக இருந்தவர். அண்ணாமலையை பொறுத்தவரையில் வாயை திறந்தாலே பொய் தான் சொல்கிறார். அவர் பாதயாத்திரை போகவில்லை, வாகன யாத்திரை தான் செல்கிறார். இந்த பாதயாத்திரை முடிந்த பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்.
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவேரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கிறோம். மழை பொழிவு குறைவாக உள்ளதால், தற்போது 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்த போது, மாநிலங்கள் வேண்டும் என்றால் அமல்படுத்தி கொள்ளலாம் இல்லை என்றால் நிறுத்தி விடலாம் என்று கூறியது. ஆனால் பாஜக அரசு நீட் தேர்வை கட்டாயமாக அமல்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசி இருக்க வேண்டும்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்”
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.







