இ-சேவை மையங்கள் குறைவாக இருப்பது உண்மைதான் எனவும் இ-சேவை மையங்களில் சில தவறுகள் நடப்பதாக கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், முதலமைச்சர் ஆணைக்கிணங்க வருவாய் துறை சம்பந்தமான ஆய்வு செய்யப்பட்டதாகவும், பணிகளை விரைந்து நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தாலுக்கா அலுவலகத்திற்கு மக்கள் அதிகம் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தாலுகா அலுவலகத்திற்கு வந்து மக்கள் அலையத் கூடாது என்பதால் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. முடிந்தளவு மக்கள் ஆன்லைனை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
வளர்ந்த நகரமான கோவை மாவட்டத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பதோடு அதற்காக நிலங்களை எடுத்து கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்துவிரைந்து நிலங்களை ஒதுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோவை மாவட்டத்தில் ஆறாயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வாக்குறுதியளித்தை குறிப்பிட்ட ராமச்சந்திரன், தகுதி இருப்பவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகுவும் தெரிவித்தார்.கோவையில் உள்ள 11 தாலுக்கா அலுவலகங்களில், 4 இலட்சம் பேருக்கு ஒரு தாலுகா அலுவலகம் உள்ளது.குறிப்பிட்ட அளவிற்கு தாலுகா அலுவலகங்கள் அதிகரிக்கப்படும் எனவும் வரும் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் தாலுக்கா அலுவகங்களை அதிகரித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
கோவை மாவட்டத்தின் மீது முதலமைச்சருக்கு தனிப்பட்ட அக்கறை உள்ளது. எது கேட்டாலும் செய்து தருவார் எனவும் செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருப்பது நல்ல காரியம். இப்பகுதி முன்னேற வேண்டும் என நினைக்கிறார்.
பத்திரப்பதிவு பட்டா இருந்தால் உடனே மாற்றம் செய்து தரப்படுகிறது. குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் இருந்தால் தான் தாமதம் ஏற்படுகிறது.எந்த மனுக்களாக இருந்தாலும் 15 நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. அதற்குள் முடித்து தர முயற்சித்து வருகிறோம் எனவும் கணினியில் வரும் போது ஒருசில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது, அதையும் சரிசெய்து தர முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இ-சேவை மையங்கள் குறைவாக இருப்பது உண்மைதான் எனவும்,இ சேவை மையத்தில் சில தவறுகள் நடப்பதாக கவனத்திற்கு வந்துள்ளது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.







