படித்த பள்ளிக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய தலைமை பொறியாளர் வழங்கிய நிதியுதவி!!

அரசு பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசளிக்க ரூ.3 லட்சம் நிரந்தர வைப்பு தொகையை வழங்கிய தஞ்சாவூர் ஓய்வு பெற்ற மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு…

அரசு பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசளிக்க ரூ.3 லட்சம் நிரந்தர வைப்பு தொகையை வழங்கிய தஞ்சாவூர் ஓய்வு பெற்ற மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தஞ்சாவூர் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வரும் அர.தங்கராசன் (80)  நாகை – திருவாரூர் மாவட்ட மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கல்யாணி (71).

இந்நிலையில் தங்கராசன், தான் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், பேராவூரணி அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியின் பெயரில் சுமார் 2 லட்சமும், நடுவிகுறிச்சி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி பெயரில் 1 லட்சமும் பேராவூரணியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்பு தொகையில் செலுத்தினார்.

அதில் வரும் வட்டியை கொண்டு, பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு பிரித்து ரொக்கப் பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

மொத்தம் 3 லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு கணக்கில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும், வட்டிப்பணம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து, உரிய வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆதி திராவிடர் உயர்நிலைப்பள்ளி தலையாசிரியரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து, தங்கராஜன் கூறுகையில், “நான் படித்த பள்ளியை கௌரவிக்கும்
விதமாக இந்த ஏற்பாட்டை செய்துள்ளேன். எனக்கு பிறகும் இது தொடர்ந்து நடைபெற
வேண்டும் என்றார்.

இந்த வைப்பு நிதி வரும் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு  உறுதுணையாக இருக்கும் என்றும் இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.