அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

காரைக்காலில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற உதவி ஆய்வாளர் மகன்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் உதவி ஆய்வாளர்…

காரைக்காலில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற உதவி ஆய்வாளர் மகன்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரைக்காலில் உதவி ஆய்வாளர் குமார். இவரது மகன் சுகந்தேஸ்வரன் காரைக்காலை அடுத்த தாமனாங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.பி.ஏ படித்து வந்தார். மேலும், புதுச்சேரி போலீஸ் தேர்வில் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வுக்காக காத்திருந்தார்.
சுகுவேந்தன் காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து விட்டு மேல் படிப்பிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், இருவரும் முடிவெட்டுவதற்காக தங்களது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் காரைக்கால் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
 காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே, காரைக்காலில் இருந்து சிதம்பரம் சென்ற தமிழக அரசு பேருந்து மீது நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர், சுகந்தேஸ்வரன் மீது பேருந்து சக்கரம் ஏறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் சுகுவேந்தனை படுங்காயத்துடன், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த சுகந்தேஸ்வரன் உடலை கைப்பற்றிய காரைக்கால் போலீசார், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து  நகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்தவுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்கவோ, முதல் உதவி செய்யவோ, வேறு வாகனத்தில் ஏற்றிச்செல்லவோ யாரும் முன் வராமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. மேலும், புதுச்சேரி அரசு கடந்த வருடம் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  ஆனால்,அதனை முறையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.