கட்டுரைகள்

உயிர்த்தெழும் தமிழும் மு.க.வும்…


விக்னேஷ்

கட்டுரையாளர்

தமிழ்த் தாய்க்கு கோயில், தமிழ் வளர்ச்சிக்கென்று தனி துறை, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை, கட்டாயப் பாடமாக தமிழ், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இவை எல்லாம் தமிழையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் இணைக்கும் கூற்றுகளில் சில. அடுக்குமொழி தமிழும் குறும்பு வசனங்களும் கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்த பயணத்தில் தொடர்ந்து பயணிக்கிறார் தமிழ்நாட்டின் தற்போதய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

தமிழகத்தில் ஆட்சியமைத்திருக்கும் புதிய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒருபுறம் மும்முரம் காட்டிவந்தாலும் மற்றொருபுறம் கலைஞர் கருணாநிதியின் வழியில் தமிழை மேம்படுத்துவதிலும் அவர் கொண்டுவந்த திட்டங்களை புத்துயிரூட்டுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சியமைந்த இந்த இரண்டு மாதங்களில் தமிழின் வளர்ச்சியும் தமிழுக்கும் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் வாழ்க ! தமிழ் வளர்க

சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த “தமிழ் வாழ்க தமிழ் வளர்க ” எனும் பெயர் பலகை பராமரிப்பு காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. கடந்த 12 வருடங்களாக மீண்டும் வைக்கப்படாத பலகை திமுக ஆட்சியமைந்த ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் வைக்கப்பட்டது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ரிப்பன் மாளிகையின் மேல் வைக்கப்பட்டிருக்கும் “தமிழ் வாழ்க தமிழ் வளர்க” என்ற பெயர் பலகையை பார்க்கும் போதெல்லாம் தமிழ் மீதான பற்றை அதிகரிக்கச் செய்யும்.

“தொல்காப்பியப் பூங்கா”

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியில் சென்னை அடையாறு பகுதியில் 2007 ஆம் அடிக்கல் நாட்டப்பட்டு 2011 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது “தொல்காப்பியப் பூங்கா”. ஆட்சி மாற்றம் நடந்த பின் தொல்காப்பிய பூங்கா எனும் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு அடையாறு பூங்கா என அழைக்கப்பட்டு வந்தது. மீண்டும் திமுக ஆட்சியமைந்த பிறகு பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டதன்படி அகற்றப்பட்டிருந்த “தொல்காப்பியப் பூங்கா” பெயர்பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

“கலைநயமிக்க வள்ளுவர்கோட்டம்”

சென்னையில் உள்ள அதிசயங்களில் ஒன்று வள்ளுவர்கோட்டம். திராவிடக் கட்டடக்கலையை மையமாக கொண்டு கலைஞர் கருணாநிதி உருவாக்கிய வள்ளுவர்கோட்டம் கலைநயம் மாறாமல் புதுப்பிக்கப்படவுள்ளது. வள்ளுவர்கோட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் அறிவுறுத்தலின் படி வள்ளுவர்கோட்டத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

“அண்ணா நூற்றாண்டு நூலகம்”

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் கலைஞர் கருணாநிதி 2010 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அண்ணா, பெரியார் எழுதிய நூல்களில் தொடங்கி சட்டம், வணிகம், பொருளாதாரம், விளையாட்டு என அனைத்து விதமான நூல்களும் இந்த நூலகத்தில் இடம்பெற்றிருப்பது இந்த நூலகத்தின் சிறப்பம்சம். உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகள், தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி விரைவில் புதுப்பொலிவு அடையவுள்ளது.

வானுயர்ந்து நிற்கும்
வள்ளுவர் சிலை

2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 133 அடி உயரத்தில் 7000 டன் எடையுடன் உருவாக்கப்பட்ட வள்ளுவர் சிலை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது. சுனாமி எனும் பேரலையை எதிர்த்து நின்ற வள்ளுவர் சிலை, இன்று கன்னியாகுமரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே அடையாளமாக திகழ்கிறது. வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளையும் தொடங்கியிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

வெளிநாடுகளில் தமிழ்மொழி

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில், மூடப்படும் அபாயத்தில் இருந்த தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்கிட தமிழ்நாட்டு அரசு மூலம் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறையின் மூலம் தமிழ்மொழி உலகெங்கும் பரவ தேவையான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது தமிழ்நாட்டு அரசு. மகாகவி பாரதியின் கூற்றான தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்தமைக்கு ஐரோப்பா தமிழ் கூட்டமைப்பு மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது

“பேருந்துகளில் திருக்குறள்”

தமிழ்நாட்டில் இயங்கக் கூடிய அரசு பேருந்துகளில் திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்துடன் கூடிய பலகைகள் வைக்கும் பணியை தமிழ்நாட்டு போக்குவரத்துதுறை தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி அனைத்து பேருந்துகளிலும் விளக்கத்துடன் கூடிய திருக்குறள் பலகைகள் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருணாநிதியின் தொடர்ச்சி ஸ்டாலின்…

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் வழியில் அர்ப்பணிப்பு, விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு தமிழுக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் அளிப்பதோடு, தமிழ் மொழியின் தொடர் பயன்பாட்டில் முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்யும் பணியில் கவனமாக செயல்பட்டு வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

Advertisement:
SHARE

Related posts

விசிக முதல் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வரை…யார் இந்த செல்வப்பெருந்தகை?

Vandhana

என்ன நடக்கிறது லட்சத்தீவில்?

2015ம் ஆண்டை போல மீண்டும் சென்னையில் வெள்ளம் வர போகிறதா?

Ezhilarasan