சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வகை வைரஸ் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த அக்டோபரில் இந்த வகை வைரஸ் தொற்று முதன்முதலாக குஜராத்தில் கண்டறியப்பட்டதாகவும், இதுவரை குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தலைமையில் கொரோனா பரவல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் வேகமாக பரவும் சூழல் உள்ளதால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மண்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், புதிய வகை கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் , பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
மேலும் ஒமிக்ரான் பிஎப். 7 வைரஸ் தொற்று வகையே, திடீர் தொற்று பரவல் அதிகரிப்பிற்கு காரணம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் குறைவாக இருந்து வரும் நிலையில், சீனா மற்றும் ஹாங்காங்கில் பரவி வரும் கொரோனா காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர், சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் நண்பகல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.