ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமிக்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், ஆடைக்கு மேலே உடலை தொடுவது, போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனவும் இதனால் அது பாலியல் குற்றமாகாது எனவும் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித் தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பு தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், இது வரும் காலங்களில் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் முறையிட்டார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிக்க நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.
குழந்தையின் ஆடைக்கு மேலாகத் தொட்டாலும், அது பாலியல் தொந்தரவுதான் என்றும், அதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தனர். ஆடைக்கு மேலே உடலை தொடுவது பாலியல் குற்றமாகாது என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள், ரத்து செய்தனர்.
இந்த வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு 5 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.