“எனது கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்” என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகை மீனா தெரிவித்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு, பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் சில காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனாலும், நுரையீரல் செயல்படாமல் இருந்ததால் எக்மோ சிகிச்சையிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது கணவர் இறந்தது தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பல செய்திகள் உலா வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மீனா வெளியிட்ட செய்தியில், “எனது கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.
இந்த இக்கட்டான கால கட்டத்தில், எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.








