மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சமூகத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக குறிப்பிட்ட அமித்ஷா, மணிப்பூர் முதலமைச்சரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். வன்முறையை கைவிட்டு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மெய்தி மற்றும் குக்கி சமூக மக்கள் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட உறுதியளிப்பதாக, அமித்ஷா தெரிவித்ததை அடுத்து, மக்களவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.







