பால் விற்று ரூ.1 கோடி மதிப்பிலான பங்களாவைக் கட்டி மாஸ் காட்டிய விவசாயி; இவரது வெற்றிக்கதை என்ன?

மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர், பால் பண்ணை மூலம் சம்பாதித்த பணத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பங்களாவைக் கட்டி பலருக்கும் முன்னுதாரணமாகி இருக்கிறார். இவரது வெற்றிக்கதையை தற்போது காணலாம்… மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்தவர்…

மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர், பால் பண்ணை மூலம் சம்பாதித்த பணத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பங்களாவைக் கட்டி பலருக்கும் முன்னுதாரணமாகி இருக்கிறார். இவரது வெற்றிக்கதையை தற்போது காணலாம்…

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ் இம்டே. பால் பண்ணை நடத்தி வரும் இவர் ஒரே ஒரு பசுவில் தொடங்கி தற்போது தன் பண்ணையில் 150-க்கும் அதிகமான பசுக்களை பராமரிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

உள்ளூர் மக்களால் பாபு என அழைக்கப்படும் பிரகாஷ், தன் முதல் பசுவான லட்சுமியின் படத்துக்கு தினமும் காலை பூஜை செய்துவிட்டுதான் அன்றைய நாளை தொடங்குகிறார். ஆரம்பத்தில் 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த இவர், தனது பரம்பரை நிலம் வறண்டு விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லாமல் போன பிறகு, 1998-ல் ஒரு பசு மாடு மூலம் தன் கிராமத்துக்கு பால் விற்பனை செய்து வந்துள்ளார். அந்த பசு குட்டிப்போட்டு அதன் மூலம் அடுத்தடுத்து மாடுகள் எனத் தொடர்ந்து தற்போது 150-க்கும் அதிகமான பசுக்களை வைத்துள்ளார். இதுவே அவர் தினமும் பூஜை செய்வதற்கான காரணம்.

இது குறித்து பிரகாஷ் கூறுகையில், தான் இதுவரை பசுக்களில் ஒன்றைக்கூட விற்பனை செய்தது இல்லை என்றும், 2006-ல் இறந்த தன் முதல் பசுவான லட்சுமி போட்ட கன்றுகளையே பசுக்களாக உயர்த்தி, பண்ணையே நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது பண்ணையில் ஒரு நாளைக்கு 1,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், பசுக்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டன் பசுந்தீவனத்தை உணவாகக் கொடுப்பதாகவும், முடிந்த வரை தீவனங்களை பண்ணையிலேயேதான் உற்பத்தி செய்து, பற்றாக்குறை தீவனத்தை மட்டுமே வெளியிலிருந்து வாங்குவதாகவும் அவர் கூறினார். மேலும் பண்ணையைப் பராமரிப்பது, மாடுகளுக்கு உணவளிப்பது என அனைத்துக்கும் அவரது குடும்பம்தான் உதவுவதாகவும், அவரின் குடும்ப ஆள்களே பண்ணையை நிர்வகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் தன்னை ஒரு சாதனை தொழில்முனைவோராக நிரூபித்தது மட்டுமல்லாமல் தன் கிராமத்தில் இருக்கும் பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார். பிற மாநிலங்களிலிருந்து இவர் பண்ணையைப் பார்த்து கற்க பலரும் வந்து செல்வது வழக்கம். அப்படி வருபவர்களை பிரகாஷே நேரடியாக அழைத்துச் சென்று பண்ணையை சுற்றிக் காட்டுகிறார்.

பிரகாஷின் பல வருட முயற்சி, தற்போது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவாக உருவெடுத்துள்ளது. பிரகாஷின் வளர்ச்சி பால் விவசாயிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ள பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது பங்களாவின் மேல் ஒரு பசுவின் சிலையும், பால் சேமித்து வைக்கும் பாத்திரத்தையும் வடிவமைத்துள்ளார். மேலும் தான் கட்டியுள்ள பங்களாவுக்கு கோதன் நிவாஸ் என்றும் அவர் பெயர் சூட்டியுள்ளார்.

ஒரு பசுவில் தொடங்கிய பால்பண்ணையை வைத்து, இன்று பங்களா கட்டும் அளவிற்கு அவர் முன்னேறியிருப்பது, பலருக்கும் பால் பண்ணை வைக்கும் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமில்லாமல் பால் பண்ணை வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.

-தருண்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.