இழந்த கை, கால்களை இனி உருவாக்க முடியும்!

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. தினமும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனிதர்கள் தங்களுக்கான பல்வேறு சவால்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதில் மருத்துவம் சார்ந்த உடல்ரீதியான…

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. தினமும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனிதர்கள் தங்களுக்கான பல்வேறு சவால்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதில் மருத்துவம் சார்ந்த உடல்ரீதியான மக்கள் சந்திக்கும் சவால்களில் முக்கியமான இரண்டு, பிறவி ஊனமும், முற்றிலுமாக குணப்படுத்த இயலாது என்றுக் கருதப்படும் புற்றுநோயும் ஆகும்.

தி அமேசிங் ஸ்பைடர் மேன் எனும் திரைப்படத்தில் வரும் வில்லன் கர்ட் கார்னர்ஸ், ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி. ஒரு பல்லியின் உடல் ரசாயனங்களின் உதவி கொண்டு இழந்த தன் கையை மீண்டும் வளர செய்வார். இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று இதுவரை எண்ணியிருந்த மக்களுக்கு எதிர்காலத்தில் இதனை சாத்தியப்படுத்த உதவும் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றினை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர்.

ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் ஹார்வர்டு மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகங்களில் உயிரியல் துறையில் பயின்ற மைக்கேல் லெவின், மனித செல்கள் தங்களுக்குள் மின்சார சிக்னல்கள் மற்றும் இரசாயனங்கள் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன என்பதனை தன் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்து மைக்கேல் லெவின் கூறுகையில், “இதனை தவளைகளின் ஆரம்ப நிலையான டாட்போல்ஸ் எனப்படும் தலைப்பிரட்டையின் வளர்ச்சியிலிருந்து ஆரம்பித்து கண்டறிந்ததாக அவர் கூறுகிறார்.

“பொதுவாக நம் மூலையில் உள்ள நியூரான் செல்கள் தான் மின்சாரம் மற்றும் ரசாயனம் மூலம், ஒன்றை மற்றொன்று தொடர்புகொள்ளும். ஆனால், எந்தவித நியூரான்களும் இல்லாத செல்கள் இது போல தொடர்புகொள்வது ஆச்சரியத்தை அளிக்கிறது என்று அவர் கூறுகிறார். மனித செல்களில், அதன் நடவடிக்கைகளை சுமார் 8 முதல் 10 மணி நேரத்திற்கு பதிவு செய்து பார்த்தபொது, இது தெளிவாக புலப்பட்டது என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார் மைக்கேல் லெவின். எனவே, இதன் மூலம் செல்களின் மொத்த சேர்க்கையான திசுவானது, ஒரு உறுப்பையே மாற்ற அல்லது உருவாக்க கூடிய வல்லமை பெற்றது என்று அவர் விவரிக்கிறார்.இதனை பற்றிய ஆராய்ச்சியை மைக்கேல் லெவின் மேலும் விவரித்து கூறுகையில் “இந்த ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக நாங்கள் தவளையின் இரு தலைப்பிரட்டையை ஆராய்ந்தோம். அதில் ஒன்று சாதாரண கண், வாய் போன்றவற்றை கொண்டது. மற்றொன்று “பிக்காஸோ தவளை” என்று கூறப்படும் கண், வாய் அனைத்தும் இடம் மாறிய ஒரு தலைப்பிரட்டை.

இந்த இரு தலைப்பிரட்டைகளும் வெவ்வேறு வகையாக இருந்தாலும், இவ்விரண்டும் வளர்ந்த பின் எந்த வித்தியாசமும் இல்லாமல், பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட தவளைகளாகவே வளர்ந்தது எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்று விவரிக்கிறார்.


அதாவது, முதிர்ச்சி அடையாத செல்கள், எது கண் பகுதி எது உடல் பகுதி, எது கை கால் பகுதி,முழுமையாக வளர்ச்சி அடைய கூடிய உடலுறுப்புகள் எவை என்பன போன்று தங்களுக்குள்ளே பேசி நிர்ணயம் செய்து, அதற்கேற்றார்போல் உடலமைப்பை வளர்க்கின்றன என்று விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர் மைக்கேல் லெவின்.

இதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாய் தட்டை புழுக்களை கூறுகிறார் ஆராய்ச்சியாளர். “தட்டை புழுக்களை 200 பாகங்களாய் வெட்டினாலும் அந்த 200 பாகங்களும் 200 புழுக்களாய் உருமாறும். அதுவே அதன் சிறப்பு. இதற்கு முழு முதற் காரணம் செல்கள் தங்களுக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும் தகவல் பரிமாற்றம் தான். இந்த தட்டை புழுக்களுக்கு தலைப் பகுதியும் வால் பகுதியும் உண்டு.

ஒரு தட்டை புழுவை மூன்றாக வெட்டி புழுவின் நடுப்பகுதியை வளர செய்யும்போது, அதன் செல்களில் இருக்கும் சிறிய அயன் புரதச் சத்துக்களை டிரான்சிஸ்டர்களாகக் கருதி, அதனை இயக்கி, இரட்டைத்தலை கொண்ட புழுக்களையும், தலையே இல்லாத புழுக்களையும் செயற்கையாக எங்களால் உருவாக்க முடிந்தது” என்கிறார் மைக்கேல் லெவின்.


“இந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட இரட்டைத்தலை புழுக்களுக்கு வயது நிர்ணயம் இல்லை. எனவே, இந்த ஆராய்ச்சியின் துணை கொண்டு மனித செல்களின் வயது நிர்ணயத்தையும் குறைக்க முடியும், அதாவது என்றும் இளமையாக இருப்பது போன்ற மாற்றத்தை உருவாக்க முடியும் என்கின்றார் மைக்கேல் லெவின்.

இந்த செல்கள் ஆராய்ச்சியின் மூலம் நான்கு கால்களை உடைய தவளைக்கு ஐந்தாவதாக ஒரு காலை வளர செய்து, 5 கால்களை உடைய தவளையாக மாற்றியுள்ளனர். மேலும் அதற்கு தேவையான உறுப்புகள் அனைத்தையும் இரண்டாக, மூன்றாக நம்மால் உருவாக்க முடியும் என்றும் உறுதியளிக்கிறார் மைக்கேல் லெவின். இது அனைத்தையும் செல்லுலார் அளவிலேயே நம்மால் செய்ய முடியும் என்றும் கூறுகிறார்.”5 கால்களை உடைய தவளை உருவாக்க நாங்கள் உபயோகித்த தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களின் உடல் ஊனம் மற்றும் பிறவி ஊனத்தை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார்.

அதாவது கை, கால்களை இழந்தவர்களுக்கு புதியதாக கை கால்களை உருவாக்க முடியும் என்று அவர் உறுதியளிக்கிறார். மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கேன்சர் போன்ற நோய்களையும் முற்றிலுமாக குணப்படுத்துவது மட்டுமல்லாமல், இழக்க நேரிடும் உடல் உறுப்புகளையும் மறுபடியும் உருவாக்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் மைக்கேல் லெவின். இது போன்ற உடல் உறுப்பு மாற்றங்களை, ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் அவர்கள் டிசைன் செய்து உருவாகியுள்ளதே எதிர்காலத்தில் நமக்கு உதவ வழிவகுக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர்.

இது அனைத்தும் கத்தி ஊசி போன்ற எவ்வித மருத்துவ கருவிகளும் இன்றி, நம்முள்ளே இருக்கும் செல்கள் அளவிலான மருத்துவ தொழில்நுட்பம் கொண்டே சரி செய்யப்படும் என்பதே இதன் கூடுதல் சிறப்பு என்று அவர் கருதுகிறார். செல்கள் தங்களுக்குள் என்ன பேசுகின்றன எப்படி பேசிக் கொள்கின்றன என்பதை நம்மால் முழுமையாக படிக்க முடிந்தால், அது மருத்துவத்துறைக்கு எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்கிறார் மைக்கேல் லெவின்.

குணப்படுத்த முடியாது என்று எண்ணி கவலை கொண்ட பல நோய்களையும் இன்னல்களையும், மருத்துவ வசதி கொண்டு நம்மால் இன்று வென்றெடுக்க முடிந்துள்ளது. “கேன்சர், உடலுறுப்பு செயலிழத்தல், கை கால் ஊனம், எப்போதும் இளமை, போன்ற பல்வேறு முடிவில்லா பிரச்சினைகளுக்கு, மைக்கேல் லெவினின் ஆராய்ச்சி எதிர்காலத்தில் நல்லதொரு முடிவை தரும் என்றே நாம் நம்ப நேர்கிறது. கால்கள் இழந்த மனிதர்கள், மீண்டும் தங்கள் சொந்த கால்களில் நின்று வீரநடை போடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

சி.பிரபாகரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.