முக்கியச் செய்திகள் தமிழகம்

குரங்குக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய ஓட்டுநர் – குவியும் பாராட்டுகள்

நாய் கடித்து மயக்கமடைந்த குரங்குக்கு முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்றியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் (கடந்த 9ம் தேதி )குரங்கு ஒன்றை, தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. அதில் படுகாயமடைந்த குரங்கு, மரத்தில் ஏறி தப்பித்து, கிளையில் படுத்தவாறு மயக்கமடைந்தது. இதனை கண்ட கார் ஓட்டுநரான பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறக்கினார்.

மேலும், மூர்ச்சையான குரங்கிற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த அவர், நண்பர்கள் உதவியுடன் பெரம்பலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பாதி வழியில் குரங்கின் தலை துவண்டு விழுந்தது. குரங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த பிரபு, வாகனத்தை நிறுத்தி, குரங்கை தரையில் கிடத்தி, அதன் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி விட்டார்.

ஆனாலும், எவ்வித அசைவும் ஏற்படாததால், குரங்கு என்றும் பாராமல் அதன் வாயோடு, தன் வாயை வைத்து ஊதினார். இதனை பிரபு தொடர்ந்து செய்ததால், குரங்கு மூச்சு விட தொடங்கி கண் விழித்து பார்த்தது. மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் உதவியுடன் குரங்கிற்கு தண்ணீர் வழங்கினார்.

குரங்கை காப்பாற்றி விடலாம் என தீர்மானித்த பிரபு, வேகமாக வாகனத்தை இயக்கி பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து குரங்கை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து குரங்கை ஒப்படைத்துள்ளார். பிரபுவின் செயலை உடன் சென்ற நண்பர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், பிரபுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஓட்டுநரின் இந்த செயலை வீடியோவாக தனது டிவிட்டர் பக்கதில் பகிர்ந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண் குமார் “யாமறிந்த தெய்வம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம்

Jeba Arul Robinson

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

நடிகை நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய நடிகை சமந்தா!

Vandhana