தங்கள் பகுதியில், கழிவு நீர் கால்வாய் அமைத்துக் கொடுத்தால்தான் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தேங்காமல் இருக்க என்ன தீர்வு?” என நியூஸ் 7 தமிழ், இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
இந்நிலையில், திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியில் மக்கள் கூறியதாவது:
இங்க தண்ணீர் போக வழியே இல்லை. கடந்த 10 நாட்களா இந்தப் பகுதியில தண்ணீர் தேங்கி இருக்கு. கழிவு நீரும் இதோட கலந்திட்டதால, இப்ப மோசமான வாடை வீச ஆரம்பிச்சுடுச்சு. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள்ட்ட கோரிக்கை வச்சும் பலனில்லை. தொற்று நோய் பரவும் ஆபத்து இருக்கு. கழிவு நீர் கால்வாய் அமைத்துக் கொடுத்தாதான் மழை நீர் தேங்காமல் இருக்கறதுக்கு நிரந்தர தீர்வா இருக்கும்.
https://twitter.com/news7tamil/status/1462369826798596107
ஒவ்வொரு மழை காலத்திலயும் இதை நாங்க அனுபவிக்கிறோம். இப்பவும் முட்டி அளவு தண்ணி இருக்கு. எந்த அதிகாரியும் இங்க வரலை. எங்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கலை. நகராட்சியும் அரசும் மழை நீர் செல்ல கால்வாய் ஏற்படுத்தி தரணும்ங்கறது எங்க கோரிக்கை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.








