பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் என்னமோ ஏதோ, தடையறத் தாக்க, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட பல படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். மே டே, தேங்க் காட், டாக்டர் ஜி உட்பட சில இந்தி படங்களில் இப்போது நடித்து வருகிறார்.
இதற்காக அவர் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது மாடியில் நேற்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்து நடந்தபோது நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் இல்லை. அவர் படப்பிடிப்புக்காக சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. நடிகை ரகுல், இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் சமூக வலை தளத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








