நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் சாலையில் தனியாக சென்று கொண்டிருந்த மாட்டை காட்டெருமை ஒன்று கொம்பால் குத்தி தூக்கி வீசிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் எங்கும் பசுமை சூழ்ந்து காணப்படுகிறது.அதிகளவில் வனப்பகுதிகள் உள்ளதால் அவ்வப்போது மக்கள் வசிக்கும் குடியிருப்புகளின் அருகேயே இரை மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் உலா வருவது தொடர்கதையாக உள்ளது.அவ்வாறு வரும் விலங்குகள் சில சமயம் மக்கள் மற்றும் வீடுகளில் வசிக்கும் கால்நடைகளை கொடூரமாக தாக்கி விடுகின்றன.
அப்படியொரு சம்பவம் தான் தற்போதும் நீலகிரியில் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த கேணிகண்டி பகுதியிலுள்ள சாலையில் இளம் பசுங்கன்று ஒன்று தனியாக நடந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதியில் உலா வந்த காட்டெருமை ஒன்று தனது கொம்பால் ஆக்ரோசமாக குத்தி தூக்கி வீசி கொன்றது.இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வன விலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வனவிலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தங்களின் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







