குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்த்தியான உடைகளுடனே பிரதமரை காண முடியும். இன்றைய குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் பாரம்பரியமான குர்தா, பைஜாமா, க்ரோ நிறத்திலான ஜாக்கெட்டை பிரதமர் அணிந்திருந்தார். அத்துடன், குஜராத்தின் ஜாம் நகரில் தயாரிக்கப்பட்ட பாரம்பரியமான தலைப்பாகையையும், முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட ஹலாரி பாகதியை (அரச தலைப்பாகை) ஜாம்நகரின் அரச குடும்பத்தினர் அவருக்கு பரிசாக வழங்கினர். இதுதொடர்பாக ஜாம்நகர் தொகுதி மக்களவை உறுப்பினர் பூனாபென் மாடம், உயர்ந்த கலாச்சாரத்திற்கு பெயர்பெற்ற ஜாம்நகரின் தலைப்பாகையை குடியரசு தினத்தன்று பிரதமர் அணிந்திருந்தது பெருமையளிப்பதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

குடியரசு மற்றும் சுதந்திர தின நிகழ்வுகளின்போது பிரதமரின் உடைத் தேர்வுகளில் தலைப்பாகைக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த வருட குடியரசு தினத்தின் போது காவி நிறத்தினாலான பந்தேஜ் தலைப்பாகையை அணிந்தார்.
2014ஆம் ஆண்டு பிரதமரான பிறகு தனது முதல் சுதந்திர தின உரைக்காக பச்சையுடன் கூடிய வெளிர் சிவப்பு நிற தலைப்பாகையை தேர்ந்தெடுத்தார். 2015ஆம் ஆண்டு மஞ்சள் நிறத்திலும், 2016ஆம் ஆண்டு பிங்க் நிறத்திலும் ஆன தலைப்பாகையை பயன்படுத்தினார். 2017 இல் சிவப்பு, மஞ்சள் வண்ணம் கலந்த தலைப்பாகை, 2018ஆம் ஆண்டு காவி நிற தலைப்பாகையை அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.