தமிழ்நாட்டில் நடத்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.
இதனிடையே 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது. இன்று காலை 10 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு தாமதமாகிறது. அதாவது, மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவினை அறிவிப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கூறும் பட்சத்தில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தவெக பெறும்.
இதற்கிடையே, ஆட்சி, அதிகாரத்தில் விசிக பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை என விசிக பொதுச்செயலாளரும், எம்.பியுமான டாக்டர் ரவிக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







