வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவிகிதமாக அதிகரிக்கபட்டு உள்ளதாக கூறிய அவர், இதனை உடனடியாக அமலுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், வட்டி விகித உயர்வால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும், நாட்டின் அன்னியச்செலாவணி கையிருப்பு திருப்திகரமாக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால், வீடு, வாகனம், தனிநபர் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.







