வீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இடிந்து விழுந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழைய வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகளை கட்டித்தர வேண்டிய எண்ணம் கடந்த ஆட்சியில் இருந்தவர்களுக்கு இல்லை என சாடினார்.
மேலும், மோசமான வீடுகளில் வசிப்பவர்களை கண்டறிந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இடிந்து விழுந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பு 28 ஆண்டுகள் பழமையானது என குறிப்பிட்ட அமைச்சர், வீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பரசன், இடிந்து விழுந்த குடியிருப்பை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்த 24 குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் மற்றும் மாற்று வீடுகள் உடனடியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.








