ஒமிக்ரான் ஊரடங்கு தொடர்பாக வரும் 31-ஆம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தரவு அலகு (Data Cell) அறையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்தா, ஆயுர்வேத்துடன் கூடிய ஆயிரத்து 542 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் மருத்துவ செயல்பாடுகள் குறித்து அறிவதற்கு டேட்டா செல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஊரடங்கு தொடர்பாக வரும் 31ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் பிறகு இரவு நேர ஊரடங்கு போடலாமா என்பது குறித்து முடிவு எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான டிடிவி தினகரன் கேள்விக்கு, எல்லா கட்சிகளின் கூட்டங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே அனுமதி அளிக்கப்படுகிறது என பதிலளித்தார்.








