வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது; அரசியல் கட்சியினர் போராட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மல்லூர், ஆட்டையாம்பட்டி மற்றும் இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு…

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் மல்லூர், ஆட்டையாம்பட்டி மற்றும் இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இளம்பிள்ளையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த அரசியல் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

இதேபோல் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பதிவு செய்யப்பட்ட 36 வாக்குப்பதிவு எந்திரங்கள் சீர்காழியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி வளாகத்திற்குள் பெரிய அளவிலான காணொளி திரை வைக்கப்பட்டிருந்தது. பின்பு திடீரென காணொளி திரை பழுதானதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு குவிந்தனர். மேலும் காணொளி திரையானது காட்சிகள் ஏதும் இல்லாமல் சுமார் ஒரு மணி நேரம் நின்றுவிட்டதால் அந்த சமயத்தில் தவறுகள் ஏதாவது நடந்திருக்கக் கூடும் எனக் குற்றம் சாட்டினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.