தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடமும் செங்கம் – கலசப்பாக்கம் சட்டமன்ற இணைப்பில் ஜவ்வாது மலையில் புதிய சார்பதிவாளர் அலுவலகமும் அமைத்துத்தரப்படுமா என செங்கம் எம்.எல்.ஏ., கிரி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, 1950-ல் செங்கத்தில் சிறிய அறையாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டதாகவும் தற்போது 2,990 சதுர அடி அளவில் கட்டிடம் உள்ளதாகவும் சமீபத்தில் கூட அடிப்படை வசதிகள் அங்கு செய்து தரப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தற்போது புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சுமார் 4,500 அடி தேவைப்படுகிறது. அந்த அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் போதிய இடவசதி இல்லாததால் இடம் கிடைக்கும் பட்சத்தில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. ஒரு வட்டத்துக்கு உட்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் இருக்க வேண்டும். மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு தாலுக்காவிற்கு 2 சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.







