டிஎம்எஸ்-ஸின் 100-வது பிறந்தநாள்: ‘அந்தநாள் ஞாபகம்’ என நினைவுகளை பகிர்ந்த பாடலாசிரியர் வைரமுத்து!

இசையுலகில் பெரும் புகழுக்குரியவராக இருந்த டி.எம்.எஸ் நினைவுகளை அவரது 100-வது பிறந்த நாளான இன்று பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘டி.எம்.எஸ்’ என்று அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜன் 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு…

இசையுலகில் பெரும் புகழுக்குரியவராக இருந்த டி.எம்.எஸ் நினைவுகளை அவரது 100-வது பிறந்த நாளான இன்று பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘டி.எம்.எஸ்’ என்று அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜன் 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஒலித்த குரல். தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ், என்.டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா போன்றோருக்குப் பின்னணி பாடல்களை பாடியவர்.

டி.எம்.எஸ் 1922, மார்ச், 24ல்மதுரையில் பிறந்தார். சிறுவயதில் இருந்தேஇசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குநர் கவனித்தார். எனவே அவரின் அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார்.

இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ்.  ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.

பின்னர் தொடர்ந்து 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் பாடல் பாடினார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பணியாற்றினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “தமிழ் செம்மொழிமாநாட்டு பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 11,000க்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார். 

‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, என்று பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் இவருக்கு மத்திய அரசு 2003ம் ஆண்டு “பத்மஸ்ரீ”விருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் “கலைமாமணி உட்பட பல விருதுகளை பெற்றார்.

தன் தனித்துவமான குரலால் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் பாடல்களை இசையுளகிற்கு கொடையாக அளித்த  டி.எம்.எஸ் 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அவர் காலமானார்.

https://twitter.com/Vairamuthu/status/1639092244178419712?s=20

இசையுலகில் பெரும் புகழுக்குரியவராக இருந்த டி.எம்.எஸ்ஸின் நினைவுகளை அவரின் ரசிகர்களும் திரைத்துறையினரும் இன்றளவும் போற்றி வருகின்றனர். அந்த வகையில், கவிஞரும், எழுத்தாளரும், பாடலாசிரியருமான வைரமுத்து டி.எம்.எஸ்ஸின் 100வது பிறந்த நாளான இன்று அவரின் நினைவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ”டி.எம்.செளந்தரராஜன் வீட்டுக்குள் ஒலித்த வெண்கல வீணை, ஒரு நூற்றாண்டுத் தமிழர்கள் காதுகளில் அணிந்த வைரக்கடுக்கன், தமிழ்நாட்டின் ‘அந்தநாள் ஞாபகம்’… எங்கள் காதல் கண்ணீர் வீரம் ஞானம் அனைத்தையும் வாரிக் குவித்துப் பாடிப் பரவிய பரவசம், உம்மை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்…” என அவருடன் இருக்கும் புகைப்படத்துடன் சேர்த்துப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.