இயக்குநர் சேரன் அவரது ஊர் மற்றும் பள்ளி தொடர்பான மலரும் நினைவுகளை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய இயக்குநர்களில் ஒருவரும், தமிழ்த் துறையில் பிரபலமான நடிகருமான சேரன் தமிழில், அவரது அற்புதமான படைப்புகளுக்காக நான்கு முறை தேசிய விருது பெற்றார். தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளார். தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், வெற்றி கொடி கட்டு ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்காக இந்த விருதுகளைப் பெற்றார்.
இயக்குநர் மற்றும் நடிகராக மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவரது சொந்த ஊர் மதுரை, மேலூரை அடுத்த பழையூர்பட்டி என்ற ஊராட்சியாகும். சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார்.
தற்போது, சேரன் அவரது சொந்த ஊர், பள்ளி நினைவுகள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த மலரும் நினைவுகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,
”எனது ஊர்.. நான் படித்த துவக்கப்பள்ளி.. அத்தனை ஆசிரியர்களின் முகம் வந்து போகிறது.. காமராஜர் கொண்டு வந்த சத்துணவு வாங்க தட்டேந்தி நின்றது, சுதந்திர கொடியேற்றி சுண்டல் மிட்டாய் வழங்கி லீவு விட்டது, மண் தரையில் உட்கார்ந்து படிக்கும்போது கட்டெறும்பு கடித்தது எல்லாம் ஞாபகம் வருகிறது..” எனக் குறிப்பிட்டிருந்தார்.








