“வாய்ப்பு இல்ல ராஜா… வாய்ப்பு இல்ல” – ஹெச்.ராஜாவுக்கு சீமான் பதில்!

பாஜக கூட்டணியில் சேருமாறு அக் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  புதுகோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை…

பாஜக கூட்டணியில் சேருமாறு அக் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
புதுகோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை என்பது அவர் மனஅழுத்தத்தில் இருந்ததை காட்டுகிறது. 6 மாத காலமாக அவர் விடுப்பு கேட்டும் கொடுக்காததால்  அவர் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதுவே  அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் எப்படி பொதுமக்கள் ஏமாற்றப்பட்டனரோ, அதே போல் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்திலும்  பொதுமக்கள் ஏமாற்றப்படுவார்கள். ஒரு பிரச்னையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக தான் அமைச்சர் செந்தில் பாலாஜி  விவகாரமும் ஆளுநர் பிரச்சனையும் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படுகிறது.
சமூகநீதியை பற்றி பேசாத ஜெயலலிதா, தலித் எழில்மலை, தனபால் ஆகியோரை பதவியில்  உட்கார வைத்து அழகு பார்த்தார். ஆனால் சமூகநீதி பற்றி பேசும் திமுக  இதுபோன்ற செயலை செய்ததா? பேனா சிலை சென்னை கடற்கரையில்  அமைக்கப்பட்டால் அதை கண்டிப்பாக உடைப்போம். அதில் அந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழ் தேசியம் தோற்றுவிடும் என்று திருமாவளவன் சொல்வதற்கு எந்த உரிமையும்  இல்லை. தமிழ் தேசியம் குறித்து திருமாவளவனிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டோம் அவரது மாணவர்கள் நாங்கள்,எப்போதும் ஆசிரியர்கள்  ஓடி  ஜெயிக்க  முடியாது. மாணவர்கள் தான் ஜெயிக்க முடியும் நாங்கள்
ஜெயித்துக் காட்டுவோம்.  மணிப்பூர் பிரச்னையை திசை திருப்புவதற்காக தான் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கொள்கையை விடுத்தால் பாஜக கூட்டணிக்கு சீமானை வரவேற்போம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பதுதான் எனது பதில் என்று கூறினார். நட்பு என்பது வேறு,  அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அவர் என்னை அழைப்பது எங்களது வளர்ச்சியை காட்டுகிறது என்றும் சீமான் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.