ராஜஸ்தானில் இளைஞர் கொலை – அமைதி காக்க முதல்வர் வேண்டுகோள்

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்த ராஜஸ்தான் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்லாமியர்களின் இறை தூதரான முகம்மது நபி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக…

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்த ராஜஸ்தான் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்லாமியர்களின் இறை தூதரான முகம்மது நபி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானின் உதய்பூர் நகரைச் சேர்ந்த கன்ஹியா லால் எனும் தையல் கலைஞர், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து, உதய்பூரில் உள்ள அவரது கடைக்குச் சென்ற காஸ் முகம்மது மற்றும் ரியாஸ் எனும் இரு இளைஞர்கள், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

அதோடு, படுகொலையை செய்தது தாங்கள்தான் என்றும், பிரதமர் நரேந்திர மோடியையும் இதேபோல் தாக்குவோம் என்றும் கூறி இரு இளைஞர்களும் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ வைரலாகியதை அடுத்து, உதய்ப்பூர் மாவட்டத்திலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

உதய்ப்பூரில் தெருக்களில் குழுமிய பொதுமக்கள், தாக்குதலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தை அடுத்து, உதய்ப்பூரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலைக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள அஷோக் கெலாட், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சிறிய நிகழ்வு அல்ல என்றும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ள அவர், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்களை அமைதி காக்க கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது திட்டமிட்ட படுகொலை என கண்டித்துள்ள பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, கொலையில் ஈடுபட்டவர்கள் தனிநபர்களாக இருக்க முடியாது என்றும், அவர்கள் ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது அரசு நிர்வாகத்தின் தோல்வி என்றும் அவர் விமர்சித்தார். மேலும், உயிரிழந்த கன்ஹியா லால் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த படுகொலையை அடுத்து மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட காவல் கணகாணிப்பாளர்களும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என்று மாநில காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதய்ப்பூருக்கு கூடுதலாக 600 போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜஸ்தான் ஏடிஜிபி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், கொலையில் ஈடுபட்ட காஸ் முகம்மது மற்றும் ரியாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் உதய்ப்பூரின் சுரைபோலி எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.