தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




