சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பினர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான புதிய இலச்சினை இன்று வெளியிடப்பட்டது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்தியா சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை வெளியிட்டனர்.
மேலும் 50 நாட்களுக்கான கவுண்டவுன் மற்றும் திட்ட வரைப்பட காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், இந்திய வரலாற்றில் சரித்திரம் படைக்கும் விதமாக, 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான உரிமையை மு.க.ட்லின் பெற்று அதற்கான இலச்சினையை வெளியிட்டுள்ளார் என்றார். சென்னை மாநகராட்சியின் பழமை வாய்ந்த கட்டடத்தில் லோகோ மற்றும் சின்னத்தையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் என தெரிவித்தார். இந்த கட்டடத்தில் இருந்து தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையின் மேயராக தேர்ந்தெடுக்க பட்டார் என தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன், இந்திய பாரம்பரியமான இந்த செஸ் போட்டிகள், இந்தியாவில் தொடங்கப்பட்டு மங்கோலியா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது என்றார். தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களிலும் ஒரு செஸ் போட்டியாளர் உருவாக வேண்டும் என முதலமைச்சர் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்திற்கு தம்பி என்று பெயரிடப்பட்டுள்ளது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இந்த பெயரை சூட்டியுள்ளதாகவும், தமிழர்களுடைய விருந்தோம்பலை உலகம் முழுவதும் பறைசாற்றும் விதமாக ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
செஸ் ஒலிம்பியாட் என் சின்னத்தில் இருக்கக்கூடிய தம்பி எனும் பொம்மைக்கு வேட்டி சட்டை அணியும் எண்ணத்தை முதலமைச்சரே பகிர்ந்து வடிவமைக்க சொன்னார். உலகத்திற்கே சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் இதற்கு தம்பி என பெயர் சூட்டியுள்ளார் என்றும் மெய்யநாதன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்









