மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் கடந்த வாரம் முட்புதர் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்டி அவரது உறவினர்ல உடலை வாங்க மறுத்தனர். இந்த நிலையில் இன்று மாணவன் தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில் உயிரிழந்த மாணவனின் உறவினர் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற ஊப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.
உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




