கர்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்து மாநில நலனுக்கு உகந்தவாறு புதிய கல்வி கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்த உள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மே மாதம் 20ம் தேதி பதவியேற்றது.
இதன் பின்னர் கர்நாடகா மாநில சட்டப் பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து இருந்தது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, கடந்த ஜூன் 2ஆம் தேதி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டன.
அதன்படி வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, பசுவதை தடைச் சட்டம் ரத்து என பல அதிரடியான அறிவிப்புகளை கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்தது. அவற்றில் கடந்த கால பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களை மாற்றியமைக்கும்படியாக இருந்தது.

இந்த நிலையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகத்தில் ரத்து செய்ய உள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது..
“ தேசிய கல்விக் கொள்கை (NEP) கடந்த 2021 இல் கொண்டு வரப்பட்டது, இதனை ஏற்றுக் கொண்ட பாஜக ஆளும் மாநிலங்கள் கூட இதில் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்துவிட்டன.
இதுகுறித்து கர்நாடக அரசு பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பல்வேறு கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய உள்ளோம். அடுத்த ஆண்டு முதல் மாநில நலன் சார்ந்த கல்விக் கொள்கையை கொண்டு வருவோம். அதற்குள் ஒரு குழுவை அமைப்போம்.” என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.







