தளபதி 68 : அடுத்தடுத்து இணையும் பிரபலங்களின் பட்டியல் – டாக்டர் பட நடிகை இணைந்துள்ளதாக தகவல்..!

தளபதி 68 படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்களால் பட்டியல் நீண்டுள்ளது. தற்போது டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த…

தளபதி 68 படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்களால் பட்டியல் நீண்டுள்ளது. தற்போது டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே சற்று வித்தியாசமாகவே இருக்கும். சென்னை 28 படத்தில் துவங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதேனும் வித்தியாசமான விஷயங்களை வெங்கட் பிரபு முயற்சித்து வருகிறார்.

அந்த வகையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் இப்படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் விஜய்யுடன் நடிகை ஜோதிகா ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது. அதனைதொடர்ந்து விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன் ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமன், “என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரிடம் மட்டுமே இணைந்து ப்ரோகிராமராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளேன். விரைவில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படத்துக்கு ப்ரோகிராமராக பணியாற்றவுள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

 ’தளபதி 68’ திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.