ஆர்டிஓ அலுவலகங்களில் முறைகேடு நபர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை

ஆர்டிஓ அலுவலகங்களில் செயல்படும் இடைத்தரகர்கள், முறைகேடாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;“அதிமுக ஆட்சியில்…

ஆர்டிஓ அலுவலகங்களில் செயல்படும் இடைத்தரகர்கள், முறைகேடாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறையில் நடந்த பல்வேறு குளறுபடிகளால், பொது மக்களுக்கு கணினி மற்றும் இணையதளம் வாயிலான சேவைகளில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அலைச்சல் மற்றும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதனை சீர்செய்யும் விதமாக, போக்குவரத்துத் துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் , ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்கள் பதிவு போன்ற சேவைகளை, நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் போக்குவரத்துறையின் சேவைகள் எந்தவித தடங்கல்களும் இன்றி விரைவாக கிடைக்கும்.

அதே போல வட்டாரப் போக்குவரத்துறை அலுவலகங்களில் நிர்வாக சீர்கேடுகளை களையப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் வாயிலாக வழங்கப்படும் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி, பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள், முறைகேடாக செயல்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு , அவர்கள் யாராக இருந்தாலும் , சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.