கடந்த 2021-2022 நிதியாண்டில் ரூ. 500 கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில், கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79,669ஆக இருந்தது. இது 2020-2021ஆம் நிதியாண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். அதேபோல, ரூ. 2,000 கள்ள நோட்டுகளின் புழக்கமும் 54.6 சதவீதம் உயர்ந்து 13,604 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
2020-2021ஆம் நிதியாண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில், மீண்டும் அதன் புழக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,08,625இல் இருந்து 2,30,971ஆக அதிகரித்துள்ளது.
500 ரூபாய் நோட்டுகள் 102 சதவீதமும், 2000 ரூபாய் நோட்டுகள் 54 சதவீதமும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதமும், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 11.7 சதவீதமு்ம அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.








