காவல் துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவரும், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவருமான ஐபிஎஸ் ரவி ஓய்வு பெறுகிறார்.
இந்திய காவல் துறையின் 1991ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவரான ரவி, சைபர் பாரன்சிக் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மதுரை வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மூலம் முனைவர் பட்டம் பெற்ற ரவி, முதன்முதலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார்.
ஒசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில், அப்பகுதியில் நடைபெற்ற தொடர் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தினார். இவரது தொடர் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். அப்போது, பரபரப்பு நிறைந்த தங்கம் முத்து கிருஷ்ணன் கொலை வழக்கின் குற்றவாளிகளைத் திறம்பட விசாரித்து கண்டறிந்தார். அத்துடன், அப்பகுதியில் நிகழவிருந்த பெரும் கலவரத்தை தடுத்து நிறுத்தி பொது அமைதியை நிலைநாட்டினார்.
சென்னை தலைமையிட நிர்வாகப் பிரிவின் டி.ஐ.ஜி-யாகவும், சென்னை சட்டம் – ஒழுங்கு இணை ஆணையராகவும், சென்னை தலைமையிட கூடுதல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும் என பல்வேறு பொறுப்புகளில் ரவி ஐ.பி.எஸ். திறம்பட செயலாற்றியுள்ளார். சென்னை இணை ஆணையராக ரவி பணியாற்றியபோது, வட சென்னை பகுதிகளில் கட்டுக்கடங்காமல் இருந்த ரவுடீசத்தை ஒடுக்கி, பல முக்கிய ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
காவல் துறையில் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வந்த ரவி, சென்னை காவல் துறையின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி “காவலர் நமது சேவகர்” என்ற தலைப்பில் குறும்படத்தை வெளியிட்டார். இந்த குறும்படத்திற்கான திரைக்கதையை எழுதி, தயாரித்ததுடன், அதில் அவரே நடித்திருந்தது பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கியது. ரவி ஐ.பி.எஸ்-இன் சிறந்த பணிகளை பாராட்டி கடந்த 2007-ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் பெற்றார். தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்தை பெற்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ரவி இருந்தபோது பல முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்போர், பதிவிறக்கம் செய்வோர், மொபைலில் வைத்திருப்போர், பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவரின் அதிரடி அறிவிப்பு வரவேற்பு அதிகமானது. இதன்மூலம் ரவி சமூக வலைதளங்களிலும் வைரலானார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரவி, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் இவரை காவல் துறையின் உயர்ந்த பதவியாக கருதப்படும் டிஜிபியாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இவ்வாறு காவல் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்று ஓய்வு பெறும் ரவி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.








