இன்று தலைமை செயலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகள் எனக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரித்தனர்” என்றார்.
கார்த்திக் சிதம்பரம் வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புலனாய்வு துறை அமலாக்க துறை எல்லாம் புதிதாக நாங்கள் பார்ப்பது இல்லை. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கு எப்படி முடிந்தது என்று உங்களுக்கே தெரியும் என்றார்.
பிரதமர் பங்குபெற்ற நிகழ்ச்சியில், திமுக மீதான பாஜகவின் விமர்சனம் தவறானது
என்று பேசிய அவர். “பிரதமர் சென்னை வந்தபோது முதலமைச்சர் சார்பில் உரிய மரியாதை
கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. முதலமைச்சர் மாநிலத்தின் தேவையையும் கோரிக்கையையும் எடுத்துரைத்தார். அரசமைப்புச் சட்டத்திலேயே ஒன்றியம் என்கின்ற வார்த்தை இருக்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை உபயோகப்படுத்துவது எப்படி தவறாகும். பிரதமர் மத்திய அரசினுடைய சாதனைகளையும் வளர்ச்சியும் குறித்து பேசுகிறார். முதல்வர் தமிழகத்தினுடைய கோரிக்கையையும் தேவையும் எடுத்துரைக்கிறார். எனவே இருவர் பேசியதும் தவறானதல்ல” என்று கூறினார்.
நக்மாவின் அதிருப்தி குறித்து பேசிய அவர், “நக்மா, பவன் கெஹ்ரா உள்ளிட்டோர்
அதிருப்திக்கு நான் பொறுப்பல்ல. 10 பேருக்கு மட்டுமே சீட் வழங்க முடியும். நிறைய திறமை வாய்ந்த வேட்பாளர்கள் இருக்கிறார்கள். தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை தான் செய்ய வேண்டும்” என பதிலளித்தார்.
மதமாற்றம் குறித்த கேள்விக்கு, “மத மாற்றம் குறித்த கருத்துக்கள் அனைத்தும்
ஏற்க்கதக்கதல்ல. நம்மில் பெரும்பாலானோர் கிறித்துவ பள்ளிகளில்
படித்திருப்போம். இதுவரை மதமாற்றம் குறித்து கேள்விப்பட்டதில்லை என அவர்
பேசினார்.








