ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரந்தர்’. இப்படத்தில் அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்த சாரா அர்ஜுன் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாஸ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். கடந்த 5ம் தேதியன்று உலகம் முழுக்க வெளியான ‘துரந்தர்’ திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் கதாநாயகன் ரன்வீரை விட வில்லனாக நடித்த அக்ஷய் கன்னாவின் கதாபாத்திரமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அக்ஷய் கன்னாவின் நடன ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் ‘துரந்தர்’ திரைப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ‘துரந்தர்’ திரைப்படமானது வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ. 552.70 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக இப்படம் இந்து – முஸ்லிம் பிரச்னை தூண்டுவதாக கூறி சவுதி அரேபியா, குவைத், ஓமன் உள்ளிட்ட 6 அரபு நாடுகள் ‘துரந்தர்’ படத்தை தங்கள் நாட்டில் வெளியிட தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








