பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு
பிறப்பிக்க முடியாது என்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது
திருச்சி துவரங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
தாக்கல் செய்த மனுவில், துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் பேருந்து நிலையம் என்றே அழைக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இப்பகுதி மக்களின் குடும்ப அட்டை, வரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் காமராஜர் பேருந்து நிலையம் என்றே உள்ளதாகவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது தெரியவருவதாக கூறயுள்ள விஜயகுமார், அவ்வாறு பெயர் மாற்றம்செய்யப்பட்டால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும், அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்ற மக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தின் பெயர் காமராஜர் பேருந்து நிலையம் என்றே தொடர உத்தரவிட வேண்டும் என விஜகுமார் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அடங்கிய அமர்வு, ஊரின்
பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு
என தெரிவித்தது. பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு
பிறப்பிக்க இயலாது எனக் கூறிய நீதிபதிகள், ஏற்கனவே பல இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர். “மெட்ராஸ், சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டோம். மாற்றங்களை ஏற்க மக்கள் பழக வேண்டும்” எனக் கூறிய நீதிபதிகள், விஜயகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.