’சூப்பர் முதல்வர் தமிழிசை, டம்மி’ முதல்வராக ரங்கசாமி – நாராயணசாமி கடும் விமர்சனம்

தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ளாமல், துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டது ஏன் என முன்னால் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை…

தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ளாமல், துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டது ஏன் என முன்னால் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் எல்லை பிரச்சனை, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதல்வர்கள் பங்கேற்ற தென் மாநில கவுன்சில் மாநாட்டில் துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து பேசிய பாண்டிச்சேரியின் முன்னால் முதலமைச்சர் நாராயணசாமி, கேராளாவில் நடந்தது தென் மாநில கவுன்சில் மாநாடு. இது முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆளுநர்கள் மாநாடு அல்ல. ஆனால் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு,முதலமைச்சர் ரங்கசாமி இதில் கலந்து கொள்ளவில்லை. இதிலிருந்து சூப்பர் முதலமைச்சராக தமிழிசை செயல்படுகின்றார். டம்மி முதல்வராக ரங்கசாமி செயல்படுவது உறுதியாகிவிட்டது எனக் கூறினார்.

இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் எனவும் அவரை புறக்கணித்ததின் பின்னணி என்ன எனவும் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். பாஜகவிற்கும் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மாநில உரிமையை விட்டுகொடுப்பதாக உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.