பிரபல பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், 4 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், கையேயியாக ஷோபனா, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது. முதல் பாகம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

இதில் கருப்பு கண்ணாடி அணிந்து வந்த ரன்பீர் கபூர் மேடையில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், எனது கண்களில் லேசான தொற்று (Infection) ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த சுபநாளில் என் இதயத்தில் உங்கள் மீது அன்பு (Affection) மட்டுமே நிறைந்துள்ளது, அதனால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். பழம்பெரும் ‘ராமாயணம்’ தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் அவர்களை நோக்கி, “ராமானந்த் சாகரின் ராமாயணத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் நீங்கள் தான் மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் உத்வேகம். நீங்கள் எப்படி ராமபிரானை உங்களுக்குள் கொண்டு வந்தீர்களோ, அதில் ஒரு சிறிய அளவாவது என்னால் செய்ய முடிந்தால் என் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நடிகை சாய் பல்லவி, படத்தில் தனது அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது:
இத்தகைய ஒரு தெய்வீக கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு நடிகர்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. ஒரு கடவுளை, தேவதையை திரையில் பிரதிபலிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. உலகம் பார்க்கப் போகும் மிகச்சிறந்த ஒரு காவியத்தை உருவாக்குவதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் தங்களது இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து உழைத்துள்ளனர்.
ஏனெனில் இது எதிர்கால சந்ததியினருக்கான ஒரு வரலாறாக மாறப்போகிறது. இத்தகைய ஒரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தில் என்னை இணைத்ததற்கு படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

சீதை கதாபாத்திரத்தை நான் தேடிப் போகவில்லை, மாறாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்கு ஆசீர்வாதமாகவே கிடைத்தது என்றுதான் கூறுவேன். படப்பிடிப்பின் போது நான் அமைதியாக தியானித்து, ‘சீதை என் மூலமாக நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் வாழுங்கள்’ என்று வேண்டிக்கொள்வேன். இந்த முயற்சியின் மூலம் நான் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
நான் இந்தத் திரைப்படத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். ஆனால் படக்குழுவினர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரம்மாண்டமான கனவுத் திட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துள்ளனர். எனவே, இந்த நாள் எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு நாளாகும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
படத்தில், இராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கும் கன்னட நடிகர் யஷ் திடீர் சர்ப்ரைஸாக மேடையில் தோன்றி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து அவர்கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் “வணக்கம்” என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
பின்னர் நடிகர் யஷ் இந்தத் திரைப்படம் குறித்துப் பேசியதாவது:
இந்த அற்புதமான காவியப் படைப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரு கூட்டு கனவு. இந்தப் படத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு கலைஞரும் ஒரே ஒரு நோக்கத்துடன் தான் வந்துள்ளனர். நம்முடைய இந்த உன்னத காவியத்தை உலகளாவிய தளத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அது.
நமது சுய விருப்பங்கள் அனைத்தையும் கடந்து, பிரபு ஸ்ரீ ராமரின் கதையை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கவும், நம் நாட்டிலேயே அதனைக் கொண்டாடவும் நாங்கள் இங்கு ஒன்றிணைந்துள்ளோம். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய நமித் மல்ஹோத்ரா மற்றும் எனக்கு வழிகாட்டியாக இருந்த இயக்குனர் நிதேஷ் திவாரி ஆகியோருக்கு எனது நன்றிகள்.

நடிகர் ரன்பீர் கபூர் இந்த ராமராக நடிக்கும் கதாபாத்திரத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அவர் திரையில் நிகழ்த்தியுள்ள மேஜிக்கை படம் பார்க்கும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் புரிந்து கொள்ளும். நடிகை சாய் பல்லவி ஒரு மிகச்சிறந்த நடிகை, சீதையாக நடிக்கும் அவரது கண்கள் அத்தனையையும் பேசிவிடுகின்றன. மேலும் சூர்ப்பணகை, கைகேயி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷோபனா மேம் மற்றும் லட்சுமணனாக நடித்துள்ள நடிகர் என அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர். குறிப்பாக லட்சுமணனாக நடித்தவர் இந்த படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜாக இருப்பார், நீங்கள் அனைவரும் அவருக்கு ரசிகர்களாக மாறுவீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

டிரெய்லர் வரும் 24ம் தேதி இணையத்தில் வெளியாகிறது. அதை தொடர்ந்து உலகம் முழுக்க சென்று ராமாயணா படக்குழு படம் குறித்து பேசுகிறது.




