72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2024-ஆம் ஆண்டில் இந்திய மொழிகளில் வெளியான திரைப்படங்கள், நடிகர், நடிகை, இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு ஜி.வி. பிரகாஷ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
‘சூரரைப் போற்று’ (2020), ‘வாத்தி’ (2023) ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் தேசிய விருதை பெறுகிறார்.
இந்த நிலையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது:
மூன்றாவது முறையாகக் கிடைத்த ஒரு பெரும் பேறு ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான 72-வது தேசிய திரைப்பட விருதைப் பெறுவதில் நான் மிகுந்த பணிவுடனும், அளவற்ற நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். இந்த உயரிய கௌரவத்தை மூன்றாவது முறையாகப் பெறுவது உண்மையிலேயே ஒரு பெரும் பேறு; இதனை நிறைந்த நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தச் சிறப்பான அங்கீகாரத்தை வழங்கிய மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும், தேர்வுச் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் மீது நம்பிக்கை வைத்து, இந்த அழகான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கமல் ஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தச் சிறப்பான பயணத்தில் எனக்கு உறுதுணையாக நின்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ‘அமரன்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமை. இந்த இசையை உயிர்ப்பிக்கத் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் முக்கிய பங்காற்றிய எனது ஒலிப் பொறியாளர் (Sound Engineer) ஜெஹோவசனுக்குச் சிறப்பான நன்றிகள்.
எனது அன்புக்குரிய குடும்பத்தினர், இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய எனது அற்புதமான குழு, என் நண்பர்கள் மற்றும் என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் இந்த அங்கீகாரத்தைச் சமர்ப்பிக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் ரசிகர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்கள் அசைக்க முடியாத அன்பு, தொடர்ச்சியான ஊக்கம் மற்றும் என் மீதான அளவற்ற நம்பிக்கை ஆகியவை எப்போதும் எனது மிகப்பெரிய பலமாகவும் உத்வேகமாகவும் இருந்து வருகின்றன.
நான் இசையமைக்கும் ஒவ்வொரு ஸ்வரமும் உங்களுக்கே அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விருது எனக்கு எவ்வளவு சொந்தமோ, அதே அளவு உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




